
பின்லாந்தின் புதிய பிரதமராக போக்குவரத்துத்துறை அமைச்சராக செயற்பட்டு வந்த சன்னா மரின், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
34 வயதான சன்னா மரின் பதவியேற்கும்போது உலகின் மிக இளைய பிரதமராக தனது பெயரைப் பதிவு செய்வார்.
அத்தோடு சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளரான சன்னா மரின், பின்லாந்தின் மூன்றாவது பெண் அரசாங்கத் தலைவரும் ஆவார்.
சன்னா மரின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து கூறுகையில், ‘நான் எனது வயதை ஒரு பொருட்டாக கருதியதில்லை.
மக்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படுவதற்கான வழி குறித்து மட்டுமே சிந்திக்கிறேன். மேலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன’ என்று கூறினார்.
சன்னா மரின் தனது 27 வது வயதில் அவரது சொந்த ஊரான டம்பியரில் நகர சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2015ஆம் ஆண்டு பின்லாந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஜூன் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
பின்லாந்து நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று நான்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த அண்டி ரின்னே, பிரதமராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் பின்லாந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற தபால் துறை வேலைநிறுத்த விவகாரத்தை, பிரதமர் அண்டி ரின்னெ சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டி அவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதனால் அண்டி ரின்னே கடந்த 3ஆம் திகதி பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்ற சன்னா மரின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.