என்கவுண்டர் செய்த பொலிஸார் மீது வழக்குதாக்கல்.

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் வன்புணர்விற்கு பின் எரித்து கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த பொலிஸார் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் வழிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த கொலை விவகாரம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் மருத்துவரை பாலியல் ‌வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர். குறித்த நால்வரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் கொலை எப்படி நடந்தது என்பதை நடித்துக் காட்டுவதற்காக 4 பேரையும் பெண் மருத்துவர் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.

குறித்த குற்றவாளிகள் தப்பியோட முயற்சித்ததாகவும், பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்ததாகவும் தெரிவித்த பொலிஸார், தற்பாதுகாப்புக்காக அவர்களை என்கவுண்டர் செய்ததாக விளக்கமளித்தனர்.

இந்நிலையில் பொலிஸாரின் குறித்த நடவடிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளடன், எதிர்ப்பும் வலுபெற்று வருகின்றது. சட்டத்தை பொலிஸார் பிரயோகித்தது குற்றம் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்