கார்த்திகை தீபம் ஏற்றும் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு.

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு ஆண்டவர் கோயிலில் டிசம்பர் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி திண்டுக்கலை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அவரது வழக்கு, நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சரவணனின் மனுவில், “சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயிலில் கார்த்திகை தீபத்தின் போது, இலட்சக்கணக்கான பக்தர்கள் பல ஆண்டுகளாக எந்த இடையூறும் இல்லாமல் தீபம் ஏற்றி வந்தனர்.

இந்நிலையில், தற்போது கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கவில்லை. அங்கு தீபம் ஏற்றி வழிபட அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டிருந்தார்.

இதேவேளை, தீபம் ஏற்ற வருபவர்கள் வனப்பகுதியில் தங்குவதால், காடுகள் அழிக்கப்படுகிறது எனவும் தீபம் ஏற்றுவதால் வன விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும் என்பதால் வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் கோயம்பத்தூர் வன அதிகாரிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

அத்துடன், வெள்ளியங்கிரியில் உள்ள சுயம்புலிங்க கோயிலுக்கு பக்தர்கள் பெப்ரவரி மாதம் முதல் மே மாதம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அங்கு தீபம் ஏற்றி வழிப்பாடு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Recommended For You

About the Author: ஈழவன்