மாலைதீவு பிரஜை கிழக்கில் கைது!!

இலங்கையில் தங்குவதற்கான விசா, கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த மாலைதீவு பிரஜை ஒருவர் அம்பாறையில் கைதாகியுள்ளார்.

அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் குறித்த பிரஜை சந்தேகத்திற்கிடமாக தங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) மாலை கல்முனை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேக நபரான மாலைதீவு நாட்டை சேர்ந்த இப்றாஹீம் ரசீட் (வயது-54) என்பவரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் மாலைதீவு அடையாள அட்டை ஒன்று, தொலைபேசி ஒன்று, ரெப் ரக உபகரணம் ஒன்று, வைத்திய அறிக்கைகள் அடங்கிய தோல்பை ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் சட்டபூர்வமாக தங்கி இருப்பதற்கான எதுவித கடவுச்சீட்டோ குடிவரவு குடியகழ்வு செய்வதற்கான விசாவோ அவர் வசம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கைதான நபர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் ஒரு வருடமாக எதுவித கடவுச்சீட்டு மற்றும் விசா இன்றி சந்தேக நபர் இலங்கையில் தங்கி இருந்துள்ளமை தெரியவந்துள்ளது


Recommended For You

About the Author: Editor