சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்குமாறு உத்தரவு

ஹைதராபாத் அருகே பொலிஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் உடல்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி மாலை 6 மணி வரை பதப்படுத்தி வைக்குமாறு பொலிஸாருக்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த சந்தேகநபர்களின் உடல்களை பரிசோதனை செய்யும் காணொளி காட்சி தொகுப்பையும் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியிலுள்ள டோல்கேட் அருகே கடந்த 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் வைத்தியர், பாலியல் துஷ்பியரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குற்றவாளிகள் நால்வரையும் நேற்று முன்தினம் பொலிஸார் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் பொலிஸார் சட்டத்தை கையில் எடுக்கலாமா என்ற சர்ச்சையும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

இதேவேளை குறித்த என்கவுன்டர் தொடர்பாக தெலுங்கானா மாநில பொலிஸ் அதிகாரிகள் மீது மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்படவுள்ளது.

மும்பையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வழக்கறிஞர்களும் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

இதனிடையே கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களையும் பதப்படுத்தி வைக்குமாறு தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்