கள்ள காதலுக்காக மாமியாரை கொலை செய்த மருமகள்

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும்  வேன் சாரதியுடன்  தொடர்ந்து வந்த தகாத   உறவு மாமிக்கு தெரிய வந்ததால் அவரைக்  கொலை செய்து காதலனுடன் இணைந்து தூக்கில்   தொங்கவிட்ட  மருகளையும் காதலனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்களை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நித் விஜேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது   எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்

 ரஜ எல ஹெடம்ப கஸ்ஹின்னயைச் சேர்ந்த 72 வயதான எட்லிங் பெர்ணாந்து  என்ற பெண்ணே மருகளால் கொலை செய்யப்பட்டவராவர். குறுந்து வத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்லப்பிட்டிய ஹெடம்ப கஸ்ஹின்ன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 கடந்த 22 ஆம் திகதி பொலிஸ் அவசரப் பிரிவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட பெண் ஒருவர்  தனது மாமி சமையலறையில்  தூக்கிட்டுத்  தற்கொலை செய்து  கொண்டதாக கூறியுள்ளார்.  இதனையடுத்து அங்கு விரைந்த குறுந்து வத்தை பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரி சோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மரணத்தில் சந்தேகம் நிலவியதையடுத்து கம்பளை பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர்  விக்கும் கினிகே வின் ஆலோசனைக்கமைய குறுந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திக்க ஸ்ரீகாந்த் உதவி பொலிஸ் அத்தியட்சர் சூலனி வீரரட்ண ஆகியோரின் வழிக்காட்டலில்  சிறப்புப் பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது  உயிரிழந்த பெண்ணின் மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டு  அவரை கைது செய்து  மேற்கொள்ளப்பட்ட தீவிர  விசாரணையையடுத்து தனது மாமியை தானே கொலை செய்ததாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்

 மேற்படி  பெண்ணின்  கணவர் கொழும்பில் வேலை செய்து வந்த நிலையில்  கணவரின் தாய் மற்றும் தனது  மூன்று பிள்ளைகளைகளுடனும் மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில்  அமைந்துள்ள தனது வீட்டில் வசித்து வந்த  23 வயதுடைய  குறித்த பெண்  தினமும் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்  சந்தர்ப்பங்களில் குறித்த வேன் சாரதியுடன்  தொடர்பை ஏற்படுத்தி  அது காதலாக மாறியுள்ளது.

இதன் போது கடந்த மூன்று மாத காலமாக சந்தேக நபரான பெண்,  பிள்ளைகளை பாடசாலையில் விட்ட பின்னர் காதலனுடன் தனது  வீட்டு வந்து உறவு கொள்வதனை வழக்கமாக கொண்டிருந்த தாகவும் இச்சந்தர்ப்பத்தில் சம்பவ தினமான கடந்த 21 ஆம் திகதி தனது அறையில் காதலனுடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த சமயம்  கொலையுண்ட பெண்ணான தனது மாமி நேரில் கண்டு விட்டதாகவும் அச்சமயம் மேற்படி விடயம் கணவருக்குத் தெரிந்தால் விபரீதமாகிவிடும் என்று எண்ணிய சந்தேக நபர் உடனே மாமியின் கைகளைப் பிடித்து கொண்டு காதலனிடம் அவரை கொலை செய்யும்படி கூறியதையடுத்து அதற்கு சம்மதிக்காத காதலன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் சந்தேக நபரே அருகிலிருந்த ரீசேட்டை எடுத்து மாமியின் வாய் மற்றும் மூக்கு பகுதியை அடைத்து மூச்சு திணறலை ஏற்படுத்திக்  கொலை செய்து விட்டு தப்பியோடிய காதலனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உடனடியாக  நீ இங்கு  வராவிட்டால் நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி காதலனை வரவழைத்துள்ளார்.

பின்னர்  மாமியின் உடலை சமையலறை பக்கமாக தூக்கிச் சென்று கயிறு ஒன்றில் கழுத்தை கட்டி தொங்கவிட்டுவிட்டு மறு நாள் 22 ஆம் திகதி பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பை மேற்கொண்டு தனது மாமி சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்


Recommended For You

About the Author: ஈழவன்