
தெலுங்கானா மாநிலத்தில் கால் நடை பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பின் எரித்து கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டு அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து கொலை செய்யப்பட்ட நால்வரின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன்படி காவல்துறை செய்தது சரியானது தான். ஆனால் அனைத்து பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் இதை ஏன் செய்யவில்லை என்று ஹைதராபாத் என்கவுன்டர் வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
என்கவுன்டர் செய்யப்பட்ட சிவா மற்றும் நவீன் ஆகியோரின் குடும்பத்தினர் ‘எங்களுக்கு இந்த என்கவுன்ட்டர் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் பத்திரிகை செய்திகள் மூலமே என்கவுன்ட்டர் குறித்து தெரிந்து கொண்டோம். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் செய்தது சரியே. ஆனால் இதேபோன்று ஏன் அனைத்து பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் செய்யப்படவில்லை’ எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அதேபோல் என்கவுன்டர் செய்யப்பட்ட ஆரிஃபின் தாயார், ‘காவல்துறையினர் என்ன செய்தனர் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய மகன் தற்போது இறந்துவிட்டான். இது தவறானது. என்னால் தற்போது பேசமுடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவரின் தாயார், ‘என்னுடைய மகன் தவறு செய்திருந்தால் அவனையும் எரித்து விடுங்கள். தவறு என்றால் அது தவறு தான்’ எனக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.