190 பேரைக் காவுகொண்ட விமான விபத்து – நினைவுநாள்!!

974 ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடமளவில் அக்கரபத்தனை நோர்வுட் காசல்ரீ ஊடாக சென்ற மார்டீன் எயார்-138 என்ற விமானம் சப்தகன்னி மலை உச்சியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி இன்றோடு 48 வருடங்கள் ஆகியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்த விமானம் விபத்துக்குள்ளான திகதியன்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அந்தவகையில் இன்று புதன்கிழமை உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தபட்டது. இந்த விபத்தில் மொத்தம் 190 பேர் உயிரிழந்திருந்தனர்.

இதில் 189 பேரின் சடலங்கள் சபதகன்னியின் மலை அடிவாரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதோடு ஒருவரின் சடலம் மாத்திரம் மற்றுமொரு விமானத்தின் ஊடாக இந்தோனேஷியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

அன்று முதல் இன்று வரை 48 வருடங்களாக இந்த விமான விபத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக ஒவ்வொரு வருடமும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சப்தகன்னி மலை உச்சியில் மோதுண்டு விபத்துக்குள்ளான விமானம் துண்டு துண்டாக சிதறிய நிலையில் காணப்பட்ட வேளை மார்டின் எயார்-138 விமானத்தின் ரயர் ஒன்று மாத்திரம் எஞ்சியிருந்தது.

குறித்த ரயர் விமலசுரேந்திர நீர் தேக்கத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் குறித்த விமானம் விபத்துக்குள்ளான தினத்தன்று உயிர் நீத்த 190 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

1974ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி இந்தோனேஷியாவில் இருந்து மக்கா நோக்கிச் சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விமானம் தொடர்பாக கருத்து தெரிவித்த பேர்ட்டி லயனல் ரணசிங்க கருத்து தெரிவிக்கையில், “இந்த விமானம் 1974.12.04 ஆம் திகதி விபத்துக்குள்ளானது. அன்றைய தினம் இந்த விமானம் நோர்ட்டன் பிரிட்ஜ் நகரப்பகுதி ஊடாகச் செல்வதை நான் அவதானித்தேன்.

நான் அவதானித்து சில நிமிடங்ளில் விமானம் ஒன்று சப்தகன்னி மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகத் தெரிவந்தது.

உடனடியாக விமானபடையின் உலங்கு வானூர்தி வந்து சம்பவத்தை பார்வையிட்டது. அதன் பிறகு நானும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆறுபேரும் இணைந்து மலைப்பகுதிக்குச் சென்றோம்.

அப்போது விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் இனங்காண முடியாத ஒரு சூழ்நிலையே காணப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் அனைத்தும் சேகரிக்கபட்டு நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குவித்த போதுதான் இந்த ரயர் மாத்திரம் எடுக்ககூடியதாக இருந்தது அதன் பிறகு தான் இந்த ரயரில் விமானத்தின் பெயரை எழுதி அதன் ஞாபகார்த்தமாக தாம் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அன்று முதல் இன்று வரை வெளிநாட்டவர்களும் உள் நாட்டவர்களும் இதனை பார்வையிட்டு செல்லுகின்றனர். இந்த விபத்து இடம்பெறும் போது எனக்கு வயது 36 தற்பொழுது வயது எனக்கு 82” என அவர் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor