மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து தடை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக மட்டக்களப்பு நகர் மற்றும் தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதனால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பாடசாலையொன்றும் சேதமாகியுள்ளது.

கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் இருந்த வேப்பை மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலைக் கட்டடம் சேதமடைந்துள்ளது.

பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் இல்லாத காரணத்தினால் எந்தவித உயிர்ப்பாதிப்பும் ஏற்படவில்லை.

எனினும் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளதுடன், பாடசாலை கட்டடத்திற்குள் இருந்த கற்றல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.

இதேபோன்று இன்று மட்டக்களப்பு நகரில் சின்ன வைத்தியசாலைக்கு அருகில் இருந்த மரம் வீழ்ந்ததன் காரணமாக மட்டக்களப்பு நகர் ஊடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையிலான குழுவினர் உடடினயாக ஸ்தலத்திற்கு விரைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் தொடர்ந்தும் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக பெருமளவானோர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா, நொச்சிமுனை, உப்போடை, கூழாவடி, உப்போடை, ஊறணி, இருதயபுரம், கறுவப்பங்கேணி, நாவற்கேணி,கொக்குவில் உட்பட பெருமளவான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேநேரம் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் க.சித்திரவேல் மற்றும் வட்டார மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் நேரடியாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும் வெள்ளப்பாதிப்பு பிரதேசங்களை பார்வையிட்டதுடன், வெள்ள நீர் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.


Recommended For You

About the Author: Editor