
நுவரெலியா – வலப்பனை, மலபட்டாவ பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியானதை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு அருகில் காணப்படும் கற்குவாரியை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் நேற்று (03) சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த கற்குவாரியானது, சீன நிறுவனம் ஒன்றால் நடாத்தப்பட்டுகிறது. கற்குவாரியின் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து கொண்டதால், மண்சரிவால் உயிரிழந்த பண்டார என்பவர், கடந்த வருடம், கற்குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அந்த இடத்திலிருந்து தான் போகப்போவதில்லை என்று தெரிவித்தார் என நேற்று சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
வலப்பனை ஸ்ரீ தர்மராஜாரமய விகாரையின் விகாராதிபதி தலைமையில், பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து, வலப்பனை – கண்டி வீதி, நாரன்தலாவ சந்தியை மறித்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு இடம்பெறும் வெடிப்பு செயற்ப்பாடுகளாலேயே மணல் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மணலின் செறிவு குறைவடைந்து மண் சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக 2007ம் ஆண்டு தேசிய கட்டட ஆய்வு நிலையம் மேற்கொண்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆய்வின் பின்னர் பிரதேசவாசிகள் அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டனர். ஆனாலும், அவர்கள் அதற்கு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
ஆனால், மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் கற்குவாரியை அமைப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிலையம் அனுமதி வழங்கியிருந்தது. நிலத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு கற்குவாரியை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தக் கற்குவாரி தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கும் வரை, தாம் சத்தியாகிரகத்தைக் கைவிடப் போவதில்லை என்று நேற்று சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.
எனினும் மத்திய மாகாண ஆளுநர் இது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
இதேவேளை அனர்த்தம் இடம்பெற்ற மலபட்டாவ – கல்வல பகுதியில் ஆபத்தான இடத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரும் நிலையில், இவர்கள் தற்போது, 2 விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை பிரதேச செயலகமும், பிரதேசவாசிகளும் வழங்கி வருகின்றனர்.