ஜனாதிபதி கொலை சதி – முஸ்லீம் இளைஞன் தடுப்பு காவலில்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவையோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரையோ கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணைக்கு மினுவாங்கொடை நீதிமன்ற நீதிவான் கேசர சீ.ஏ. சமரதிவாகர அனுமதியளித்தார்.

சந்தேகநபர் மினுவாங்கொடை நீதிமன்றில் கட்டுநாயக்க பொலிஸாரால் இன்று முற்படுத்தப்பட்டார்.

ஓட்டமாவடி, நீராவோடை, ஆலிம்பாதை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபரையே தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர். சந்தேகநபரை மூன்று தினங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதியளித்தது.

“சந்தேகநபர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அல்லது அவரது குடும்ப உறுப்பினரை கொலை செயற்வதற்காக திட்டமொன்றை தீட்டியிருந்தாக தகவல்கள் கிடைத்தது.
சந்தேகநபர், மேலும் 3 பேருடன் கட்டுநாயக்க அமந்தொலுவ, ஜயவர்தனபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்த நிலையில், கைதுசெய்யப்பட்டார்.

ஏனைய மூவரும் ஏதேனும் குற்றம் ஒன்றை இழைக்க தயாரில்லை என்ற விடயம் உறுதியானதை அடுத்து, அவர்கள் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

இதன் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்கவேண்டும்” என்று மன்றுரைத்த பொலிஸார், பாதுகாப்பு அமைச்சின் தடுப்புக்காவல் அனுமதியையும் நீதிமன்றில் முன்வைத்தனர்.

இதற்கமைய, விடயங்களை ஆராய்ந்த நீதவான், அதற்கு அனுமதி வழங்கியதுடன், விசாரணை நிறைவடைந்தவுடன் சந்தேகநபரை வரும் சனிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்