இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர்

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தை இலங்கைக் கிரிக்கெட் சபை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவரான மிக்கி ஆர்தர் இறுதியாக பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன், அதற்கு முன்பு தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளின் பயிற்சியாளராகவும் கடமை புரிந்திருக்கின்றார்.

இதேவேளை, இலங்கை அணியின் துடுப்பாட்டப்பயிற்றுவிப்பாளராக கிராண்ட் பிளவரும், பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக டேவிட் சாகரும், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஷான் மக்டெர்மொட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இரண்டு வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிம்பாவே அணியின் முன்னாள் வீரரான கிராண்ட் பிளவர், இலங்கைக் கிரிக்கெட்டின் ஒருநாள் அணியின் பயிற்றுவிப்பாளராக மட்டுமே செயற்படுவார் எனவும், அதனால் எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 8 வருடத்தில் இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்ட 11 ஆவது தலைமைப் பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆர்தர் விளங்குகின்றார். அது மட்டுமல்லாது அவரது தலைமைப் பயிற்சியில் பாகிஸ்தானை இலங்கை அணி அணி எதிர்கொள்ளவுள்ளமை மற்றுமொரு சவாலாகும்.

ஏனெனில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவ்வருட நடுப்பகுதியில் இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக் கிண்ணத்தொடர் வரை மிக்கி ஆர்தரே பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

எனவே, இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவியேற்கும் போதே பல்வேறு சவால்களுடனும், அழுத்தங்களுடனும் மிக்கி ஆர்தர் பொறுப்பேற்கின்றார்.

ஆனாலும், இதுவரை இலங்கைக் கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக விளங்கிய ருமேஷ் ரத்நாயக்காவும் பாகிஸ்தான் செல்லும் குழாமில் இடம்பெற்றுள்ளதால், அது இலங்கை அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என கருதப்படுகிறது.

உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அடைந்த தோல்வியை அடுத்தே மிக்கி ஆர்தர் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், அவரது பயிற்சியின் கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டு சம்பியன் கிண்ணத்தை பாகிஸ்தான் சுவீகரித்ததுடன், ருவென்டி 20 அணிகளின் தரப்படுத்தலிலும் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றது.

அத்துடன், டெஸ்ட் அணிகளின் தரவரிசையிலும் பாகிஸ்தான் முன்னேற்றத்தைக் கண்டது.

அத்துடன், இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிராண்ட் பிளவர் பாகிஸ்தான் அணியிலும் மிக்கி ஆர்தருடன் இணைந்து செயற்பட்டிருந்தார். எனவே, இருவருக்குமான பிணைப்பு மிக நெருக்கமானது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை அணியின் பந்துவீச்சுப்பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சாகர், இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளின் பயிற்றுவிப்பாளராக விளங்கியிருக்கின்றார். அத்துடன், இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேபோல, தெற்கு அவுஸ்ரேலிய கிரிக்கெட் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக பல சிறப்பான பெறுபேறுகளை வழங்கிய மெக்டெர்மொட் அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையின் சிபார்சின் பெயரில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

நிரந்தர, சிறப்பான தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த இலங்கைக் கிரிக்கெட் அணி, பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் சந்திக்க ஹத்துருசிங்கவை நியமித்தது.

ஆனாலும், அவரின் பயிற்சியின் கீழும் இலங்கை அணி பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில், உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்பாக அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனாலும், ஹத்துருசிங்கவுக்கும் இலங்கைக் கிரிக்கெட்டுக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்னமும் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்