
டெல்லியில் இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-
இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்களின் வரவு அதிகரித்து வருகிறது. எங்களது பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் நுழையும் கப்பல்கள் அனுமதி பெற வேண்டும்.
இது போன்ற சீன கப்பல்களின் வரவுகளை கடற்படைப் படைகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. தேசிய பாதுகாப்பு சவால்களைச் சமாளிக்க முழுமையாகத் தயாராக இருக்கிறோம்.
கடல்வழியாகவும் எல்லை தாண்டிய தீவிரவாதம் நடக்கலாம். அவற்றை முறியடிக்க கடற்படையும், கடலோர காவற்படையும் தயாராக உள்ளன. கடற்படைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 5 ஆண்டுகளில் 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைந்து விட்டது.
நடப்பு நிதி ஆண்டில் கடற்படைக்கு ரூ.23 ஆயிரத்து 145 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இனியும் 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. வரும் ஆண்டுகளில் 3 விமானந்தாங்கி கப்பல்களை கடற்படையில் இணைக்க திட்டமிட்டு உள்ளோம் என கூறினார்.