இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு இந்தியா தொடர்ந்து அதிக வரி விதித்துவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ள டொனால்டு ட்ரம்ப், இது தொடர்பாக நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே இந்தியா, சீனா, ஈரான் உள்ளிட்ட உலக நாடுகளுடன் தொடர்ந்து வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறார்.

அங்குள்ள நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்ததோடு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்ததால், அதற்குப் பதிலடி தரும் விதமாக இந்திய அரசும் 29 அமெரிக்கப் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்தது.

அதன் பின்னர் ஹெச். 1பி விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை மேலும் கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதுபோன்ற சூழலில் மூன்று நாள் அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ நேற்று (ஜூன் 26) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவைப் பலப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மீது தொடர்ந்து அதிக வரிகளை இந்திய அரசு விதித்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், வரி விதிப்பை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor