பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்டங்களால் வீழ்த்திய அவுஸ்ரேலியா

அடிலெய்டில் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்ரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ரி-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. டி20 போட்டியை 2-1 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா வெற்றி கொண்டது.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்ரேலியா முன்னிலை பெற்றது.

இந்தநிலையில், இரு அணிகளும் மோதிய இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்ரேலியா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதையடுத்து, அந்த அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டேவிட் வோர்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

ஜோ பர்ன்ஸ் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் மார்கஸ் லபுஸ்சேன் உடன் ஜோடி சேர்ந்த வோர்னர் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இரு வீரர்களும் சதம் விளாசினர். மார்கஸ் 162 ஓட்டகளில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய டேவிட் வோர்னர் முச்சதம் பெற்றார்.

அவுஸ்ரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது. வோர்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 335 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 302 ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இதனால் அந்த அணி ‘ஃபொலோ ஒன்’ நிலையை சந்தித்தது. பாகிஸ்தான் அணியின் 8 வது வீரராக களமிறங்கிய பந்து வீச்சாளர் யாசிர்ஷா 113 ஓட்டங்களும், பாபர் ஆசம் 97 ஓட்டங்களும் பெற்றனர். அவுஸ்ரேலியா தரப்பில் ஸ்டோர்க் 6 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

387 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ஓட்டங்கள் என்ற மோசாமான நிலையில் இருந்தது.

இந்தநிலையில் டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான நேற்று அஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வௌியேறினர்.

சற்று நிலைத்து நின்று விளையாடிய ஷான் மசூத் அதிகபட்சமாக 68 ஓட்டங்களை பெற்றார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 239 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்ரேலியா அபார வெற்றி பெற்றது. அவுஸ்ரேலியா தரப்பில் அந்த அணியின் நேதன் லயன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக விளையாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்