அயோத்தி வழக்கின் முக்கிய சான்று தொல்லியல் சான்றுகள்.

அயோத்தி வழக்கில் இராமர் கோயிலுக்கு ஆதரவான தீர்ப்புக்கு தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த சான்றுகளே முக்கிய காரணம் என இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அயோத்தி வழக்கில் இராமருக்காக ஆஜரான 93 வயதான மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் நேற்று (திங்கட்கிழமை) பாராட்டு விழா நடைபெற்றது.

இதன்போது அவர் உரையாற்றுகையில், “அயோத்தி வழக்கில் கடவுள் இராமரின் சார்பில் என்னுடன் 10 வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.வைத்தியநாதன், யோகேஸ்வரன் ஆகியோர் முக்கியமானவர்கள். வைத்தியநாதனுக்கும் சேர்த்துதான் இந்த பாராட்டு விழா. வழக்கில் வெற்றிக்கு அவர்களின் உழைப்பும் திறமையும் முக்கிய காரணம்.

அயோத்தி வழக்கு சிக்கலானது. உணர்வுபூர்வமானது. அயோத்தியில் தான் இராமர் பிறந்தார். அங்கு ஏற்கெனவே கோயில் இருந்தது. முகலாயர் ஆட்சியில் இராமர் கோயில் இடிக்கப்பட்டு அந்த கட்டுமானத்தின் மீதுதான் மசூதி கட்டப்பட்டது என்பதை நாங்கள் நிரூபித்தோம்.

அதற்கு தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த சான்றுகள் மிகவும் துணையாக இருந்தன. இராமர் கோயில் கட்ட 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்ததற்கு தொல்லியல் சான்றுகளே காரணம். அயோத்தி வழக்கில் 14 ஆயிரம் பக்கங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்தோம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அனைத்து மசூதிகளும் ஒன்றுதான். ஆனால், பிரச்சினைக்குரிய இடம் கோயில் மட்டுமல்ல. இராமர் பிறந்த இடமும்தான். எனவே அதனை இந்துக்கள் புனிதமாகப் பார்க்கிறார்கள். கோயில் இருந்த இடத்தை மாற்றலாம். ஆனால், இராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது.

இராமர் கோயிலுக்காக இந்துக்கள் நூற்றாண்டுகளாகப் போராடி வருகிறார்கள் என்பதை எடுத்துக் கூறினோம். கடவுளின் அருளால் வெற்றி கிடைத்தது” என பராசரன் தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: ஈழவன்