தெற்காசிய விளையாட்டுப் போட்டி- இலங்கைக்கு இதுவரை 14 பதக்கங்கள்!!

13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நோபாளத்தின் காத்மண்டு மற்றும் பொக்காரா ஆகிய நகரங்களில் நடைப்பெற்று வருகின்றன.

நேற்று ஆரம்பமான விளையாட்டு விழாவைத் தொடர்ந்து போட்டிகள் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமாகின.

இன்று மாலை 6 மணிவரை நடைபெற்ற போட்டிகளின்படி இலங்கை 2 தங்கப்பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களுடன் 14 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது.

இந்த போட்டித் தொடரின் முதல் நாளில் நடைப்பெற்ற டைக்கொண்டோ போட்டியின் ஆண்கள் பிரிவில் ரணுக்க பிரபாத் அபாரமாக ஆடி இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தார்.

இதேபோட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இலங்கை தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது.

முதல் நாளில் இலங்கை சார்பாக பதக்கங்களை அள்ளிய விளையாட்டாக டைக்கொண்டோ காணப்படுகின்றது. இந்தப் போட்டியில் இலங்கை முதல் தங்கத்தை வென்றதோடு 2 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தம் 9 பதக்கங்களை அள்ளியுள்ளது.

இதேவேளை, கராத்தே போட்டியில் இலங்கைக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. கராத்தே போட்டிப் பிரிவில் இலங்கை இதுவரையில் ஒரு வெள்ளிப்பதக்கமும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் நான்கு பதக்கங்களை வென்றெடுத்துள்ளது.

இதில் காட்டா பிரிவில் போட்டியிட்ட சௌந்தரராசா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தோடு பெண்கள் பிரிவில் ஹேசானி இதே பிரிவில் வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றார். கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை கட்டா பிரிவில் போட்டியிட்ட இலங்கை ஆண்கள் அணி வென்றது. அதேவேளை காட்டா பிரிவில் போட்டியிட்ட பெண்கள் அணியும் வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தது.

இதனிடையே, கரப்பந்தாட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை இலங்கை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor