செட்டிக்குளத்தில் நினைவேந்தல்.

வவுனியா- செட்டிக்குளம் பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 52 பேரின், 35 ஆவது ஆண்டு நினைவுகூரல் இடம்பெற்றது.

இந்நிகழ்வு செட்டிகுளம் விளையாட்டு மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது.

செட்டிகுளம் பிரதேசபை மற்றும் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களுக்கு இந்து மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் 52 பேர் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் மதகுருமார்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், செட்டிக்குளம் பிரதேசசபை தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் காலங்களில் குறித்த நினைவு நாளினை செட்டிக்குளம் பகுதியில் துக்கதினமாக அனுஷ்டிப்பதுடன் நினைவுத் தூபி ஒன்றினையும் அமைக்கவுள்ளதாக செட்டிக்குளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆ.அந்தோணி இதன்போது தெரிவித்தார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 52 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்