கர்ப்பிணி- எவ்வாறான உணவுகளை உட்கொள்ளவேண்டும். ?

எனக்கு 34 வயது. நான் ஒரு கர்ப்பிணி. இந்தக் காலத்தில் எவ்வாறான உணவுகளை உட்கொள்ளவேண்டும். ?
எஸ். பவி

பதில்: உங்கள் ஆரோக்கியத்திற்கும் கருவில் உள்ள உங்கள் கருவின்; வளர்ச்சிக்குமாக போசாக்கான ஆகாரங்களை உட்கொள்ளவது அவசியமாகும். நொட்டு நொறுக்கு அவசரத் தீனிகளைத் தவிர்த்து மாப்பொருள், புரதம், கொழுப்பு. விற்றமின்கள், கனிமங்கள் போன்ற பல்வேறு போசாக்குக் கூறுகளையும் உள்ளடக்கும் உணவுகளைத் தேரந்தெடுக்க வேண்டும்.

முதலில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. உங்களுக்கும் உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்குமாக இரண்டு மடங்கு சாப்பிட வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தவாறன கருத்து. மாறாக குறைத்துச் சாப்பிட வேண்டும் இல்லாவிட்டால் குழந்தை எடை கூடி ஒப்பரேசன் செய்துதான் பெறவேண்டும் என்று நினைத்தால் அதுவும் தவாறான கருத்து. வழமைபோல சாப்பிடலாம். ஆனால் உண்பது பொருத்தமான போசாக்கான உணவுகளாக இருக்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குப் பின்னர் தினமும் சுமார் 300 கலோரி வலு அதிகமாகத் தேவைப்படும். அதற்கென அதிகமாகச் சாப்பிட வேண்டியதில்லை. உங்கள் பசிக்கு ஏற்பட சாப்பிட்டால் அது அதிக கலோரி வலுத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும்.

உங்கள் பிரதான மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், பிட்டு, நூடில்ஸ் போன்றவற்றை வழமை போலச் சாப்பிடுங்கள். அவற்றின் அளவை அதிகரிக்க வேண்டியதில்லை. ஆனால் அதிகம் தீட்டிய அரிசி கோதுமை போன்றவற்றை தவிர்த்து தீட்டாத தானியங்களிலிருந்து செய்யப்படும் உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில் தீட்டாத அரிசி, அரிசிமா, ஆட்டாமா போன்றவற்றில் விற்றமின்கள் கனிமங்களை மட்டுமின்றி நார்ப்பொருளையும் கொடுப்பதால் ஆரோக்கியம் மேம்படும் அத்துடன் மலச்சிக்கலையும் தடுக்கும்.

தீட்டப்படாத தனியங்களிலிருந்து இரும்புச் சத்து, விற்றமின் B, ஓரளவு புரதம், ஆகியவையும் கிடைக்கும் என்பது குறிப்படத்தக்கது.

பழவகைகளையும் காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் அதிகளவு விட்டமின்களும் கனிமங்களும் உள்ளன. கர்ப்ப காலத்தில் அதிகம் தேவைப்படும் விற்றமின் C மற்றும் போலிக் அசிட் போன்றவை அவற்றிலிருந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தினமும் விற்றமின் C 70 மிகி அளவேனும் தேவைப்படும். தோடம்பழம், தேசிப்பழம், தக்காளி, கீரை வகைளிலிருந்து இவற்றைப் பெறலாம்.

அதே நேரம் தினமும் போலிக் அமிலம் 0.4 மிகி அளவேனும் தேவைப்படும். இலை கீரை வகைகளிலிருந்து இவற்றை இயற்கையாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு புரதம் அவசியம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. முக்கியமாக மூன்று மாதங்கள் கடந்த பின்னர் கருவினது புரதத்தேவை அதிகரிக்கும். இறைச்சி வகைகள், முட்டை, மீன் போன்றவற்றிலிருந்தும், பருப்பு பயறு சோயா போன்ற உணவுகளிலிருந்தும் நல்ல புரதம் கிடைக்கும்.

இறைச்சி மீன், இலை வகைளிலிருந்து இரும்புச் சத்தும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. போதிய இரும்புச் சத்து கிடைக்காவிட்டால் கர்ப்பணிக்கு இரத்த சோகை ஏற்படும். இது குழந்தை குறை மாதத்தில் பிறப்பதற்கும், குழந்தை எடை குறைவாகப் பிறப்பதற்கும் வித்திடலாம்.

சுறா போன்ற பெரிய மீன்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவற்றில் அதிகளவு பாதரசம் (மெர்குயிரி) இருப்பதால் கருவுக்கு நல்லதல்ல.

முட்டையில் உள்ள புரதம் தரமானது. அத்துடன் கலோரிச்சத்து, கொழுப்புச் சத்து, விட்டமின்கள் கனிமம் என பலவற்றையும் உள்ளடக்கும் அதிலுள்ள கோலின் சத்தானது கருவின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவக் கூடியது, கோலின் குறைபாடு இருந்தால் குழந்தையானது முண்நாண் பாதிப்புகளுடன் பிறக்கக் கூடிய ஆபத்து உள்ளது என்பதையும் இங்கு குறிப்பிடலாம். தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டை உட்கொள்ளலாம். கொலஸ்டரோல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

கருவுற்றிருக்கும் காலத்தில் கல்சியம் கனிமத்தின் தேவையும் அதிகரிக்கிறது. ஏனெனில் கருவின் வளர்ச்சிக்கு கல்சியம் சத்து நிறையத் தேவைப்படுகிறது. கர்ப்பணிப் பெண் போதிய கல்சியம் உட்கொள்ளாவிட்டால் தாயின் எலும்புகளிலிருந்து அது உறிஞ்சப்படும். இதன் தாக்கம் உடனடியாகத் தெரியாவிட்டாலும் எதிர்காலத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படும் ஆபத்து உண்டு. கூன் விழுந்த முதுகுகளுடனும் வளைந்த கால்களுடனும் அல்லாடும் பல முதிய பெண்கள் இதற்கு சாட்சியமாக இருக்கிறார்கள்.

இதைத் தடுப்பதற்கு ஏற்ற உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பால் தயிர் சீஸ், யோகொட் போன்றவற்றில் நிறைய கல்சியம் இருப்பதால் அவற்றை உண்பது அவசியம். கருவாடு சின்ன மீன்கள் கடலை பயறு போன்றவற்றிலிருந்தும் கல்சியம் கிடைக்கும்.

போதிய நீராகாரம் அருந்துவதும் முக்கியமாகும். புழச் சாறுகள் அருந்துவது நல்லது. கோப்பி தேநீர் போன்றவற்றை கர்ப்பகாலத்தில் அருந்துவது பற்றி சில மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அதீதமாக அருந்தாது அளவோடு அருந்துவதால் பாதிப்புகள் இல்லை.

மது அருந்துவது கூடவே கூடாது.

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்


Recommended For You

About the Author: Editor