கௌதம் மேனன்-தனுஷ்: கலெக்‌ஷன் எவ்வளவு!

தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் வருமா வராதா என்பது கடந்த ஆறு மாத காலமாக தமிழ் சினிமாவின் விவாதப்பொருளாக இருந்து வந்தது.

சமீப காலங்களில் தனுஷ் நடித்த படங்களில் மிகக்குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். 6 கோடி ரூபாய் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்யப்பட்ட தனுஷுக்கு, இறுதியாகக் கிடைத்தது மூன்று கோடி மட்டுமே என்கிறது சினிமா வட்டாரம்.

சிறந்த மனிதாபிமானி, சிறந்த நிர்வாகியாக எப்போதும் செயல்பட முடியாது என்பார்கள். அதுபோன்று சிறந்த இயக்குநர் திட்டமிட்டு படமெடுக்கும் வட்டத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அந்த ரகத்தைச் சேர்ந்தவர் கௌதம் மேனன்.

அதனால்தான் எனை நோக்கி பாயும் தோட்டா பல்வேறு பிரச்சினைகளையும் சமாளித்து காலம் கடந்து திரைக்கு வந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் நவம்பர் 29 வெளியானது. படத்திற்கான எந்தவிதமான முறையான புரமோஷன் இல்லாத சூழ்நிலை.

ஆனால், தொடக்கக் காட்சியில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் பார்க்க இளம்வயது ஆண்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி வந்தனர்.

தமிழகத்தில் 1980களில் பாரதிராஜாவுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. அதுபோன்று பாலா, அமீர், முருகதாஸ் வரிசையில் கௌதம் வாசுதேவ் மேனன் இடம்பெறுகிறார்.

இவரது படங்களின் கிளைமேக்ஸ்களும், அதற்காக தனது காதல் கதைகளை சுற்றி வளைக்கும் திரைக்கதை அமைப்பும் ஆத்திரம் வரவைத்தாலும் பார்க்கும்படியாக இருக்கும். அதிலொரு ஸ்டைலிஷ் காதல், நளினம் இவையெல்லாம் இருக்கும் என்பதால் இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டாரம் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.

தமிழ் மொழி, இனம், கலாச்சாரம் என்று பொது மேடைகளில் பேசுகின்ற இயக்குனர்கள் கூட சுத்தத் தமிழில் பெயர் வைப்பது அபூர்வமான நிகழ்வு. மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட கௌதம் மேனன் தமிழ் மொழிக்கு தன் படங்கள் மூலம் கௌரவம் சேர்ப்பதை கடமையாக வைத்திருப்பவர்.

இவர் இயக்குனராக அறிமுகமான மின்னலே படம் தொடங்கி நேற்று வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா வரை கலப்படமில்லாத தமிழ் பெயரை வைத்திருப்பதும் இவரது தனித்துவம்.

இத்தனை சாதகமான வாய்ப்புகள் இருந்தும் என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸான அன்று தமிழகம் முழுவதும் 4.85 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.

இந்த படத்தைக் காட்டிலும் குறைவான திரையரங்குகளில் வெளியான அசுரன் திரைப்படம், சுமார் ஆறு கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாக வசூல் செய்தது. அதனுடன் ஒப்பிடுகிறபோது எனை நோக்கி பாயும் தோட்டா வசூல் விஷயத்தில் வேகமாக பாயவில்லை. -இராமானுஜம்


Recommended For You

About the Author: Editor