ரஜினியுடன் மோதும் ‘எம்ஜிஆர் மகன்’!

சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகிவரும் எம்ஜிஆர் மகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடித்த சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய படம் எம்.ஜி.ஆர் மகன்.

இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, நேற்று இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. பழைய எம்ஜிஆர் படங்களில் வரும் டைட்டில் போலவே கிளாஸிக் பாணியில் உருவாகியுள்ளது இதன் டைட்டில். அத்துடன், மிக முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது படக்குழு. எம்ஜிஆர் மகன் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பதே அது.

இந்த வருட பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என படக்குழு முன்னரே அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, தனுஷின் பட்டாஸ், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களும் ரேசில் கலந்து கொண்டது. தற்போது புதுவரவாக எம்ஜிஆர் மகனும் களத்தில் இறங்கியுள்ளது.

இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் அந்தோனி தாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமியும், விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும் மற்றும் துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர்


Recommended For You

About the Author: Editor