பலாத்காரம் செய்து பெண் டாக்டர் எரித்துக்கொலை – 4 பேர் கைது

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் சம்ஷாபாத் நரசய்யபல்லியை சேர்ந்தவர் ஸ்ரீதர். மெகபூப் நகரில் கல்வித்துறையில் முதுநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயம்மா. இவர்களுக்கு பிரியங்கா (வயது 27), பவ்யா என இரு மகள்கள் இருந்தனர்.

பிரியங்கா மாதாப்பூரில் கால்நடை டாக்டராக பணியாற்றி வந்தார். பவ்யா விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிய பிரியங்கா மீண்டும் மருத்துவமனையில் வேலை இருப்பதாக கூறிவிட்டு மொபட்டில் சென்றார்.

பின்னர், இரவு 9.30 மணி அளவில் தனது தங்கை பவ்யாவிற்கு போன் செய்து, ‘மொபட் பஞ்சராகி விட்டது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் சிலர் பஞ்சர் போட்டு தருவதாக கூறுகின்றனர். இருந்தாலும் எனக்கு பயமாக இருக்கிறது’ என தெரிவித்து உள்ளார்.

இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் கழித்து பிரியங்காவின் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது, அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஸ்ரீதர், ஷேர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பல்லி பாலத்தின் கீழ் பாதி எரிந்த நிலையில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக ஷேர்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த பெண்ணின் உடலில் இருந்த மோதிரம், தங்கச்சங்கிலி ஆகியவற்றை வைத்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

பிணமாக கிடந்தது பெண் டாக்டர் பிரியங்கா என்றும், அவரை பாலியல் பலாத் காரம் செய்து மர்மநபர்கள் எரித்து கொலை செய்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அந்த பகுதிகளில் டிரைவர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், நேற்று இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் டாக்டர் பிரியங்கா மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில், ‘ஐதராபாத்தில் பெண் டாக்டர் பிரியங்கா கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கேள்விப்பட்டு வருத்தம் அடைந்துள்ளேன்.

இதுபோன்ற கொடூரமான செயலில் சக மனிதர்களால் ஈடுபட முடிகிறது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த நேரத்தில் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன்தான் உள்ளது’ என கூறி உள்ளார்.


Recommended For You

About the Author: Editor