அவுஸ்ரேலியா தீ விபத்தில் மூன்று சிறுவர்கள் பலி

அவுஸ்ரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தின் சிங்லேடன் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற திடீர் தீ விபத்து காரணமாக மூன்று சிறார்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் சிட்னியில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள குறித்த பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.30 அளவில் (17:30 ஜி.எம்.ரி.) விபத்து இடம்பெற்றதாகவும் உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த தீ விபத்தின் போது வீட்டினுள் சிக்கிக் கொண்ட 11 வயதான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவனது 5 வயதான இரட்டை சகோதரிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

அதேவேளை பிறிதொரு 8 வயது சிறுமியும், 31 வயதான பெண்ணும் அயலவர்களின் முயற்சியுடன் மீட்கப்பட்டனர். புகையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பான காரணங்கள் அறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். குறித்த வீட்டில் 6 பேர் வசித்து வந்ததாக அயலவர்களை மேற்கோட்காட்டி அவுஸ்ரேலிய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்