மரண தண்டனைக்கு பிரித்தானியா கடும் எதிர்ப்பு

இலங்கையில் மீண்டும் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், பயங்கரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது கடினமென பிரித்தானியா எச்சரித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (புதன்கிழமை) தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், பொலிஸ், பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை பிரித்தானியா மறுபரிசீலனை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தனது நீண்டகால தடையை இலங்கை கைவிட விரும்புகிறது என்ற தகவல்கள் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனையை அனைத்து சூழ்நிலைகளிலும் கொள்கை விவகாரமாக பயன்படுத்துவதை பிரித்தானியா எதிர்க்கிறது என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஆறு மாதங்களுக்கு முன்னர், ஐ.நா பொதுச் சபையில் மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய தடைக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ள நிலையில், இந்தக் கொள்கையை மாற்றியமைப்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இலங்கையின் அனைத்துலக நிலை மற்றும் சுற்றுலா தலமாகவும் வணிகத்திற்கான வளர்ந்து வரும் மையமாகவும் காணப்படும் அதன் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்


Recommended For You

About the Author: ஈழவன்