கருணை கொலை செய்ய கோரி நளினி மோடிக்கு கடிதம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினி, தன்னை கருணை கொலை செய்யுமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை எழுதி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், வேலூர் ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதத்தை நேற்று (வியாழக்கிழமை) முதல் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளிடம் மனு கையளித்துள்ளார்.

இதற்கிடையே 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது.

இதேவேளை கருணைக்கொலை செய்யக்கோரிதான் அவர் மனு அளித்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மனு குறித்து, நளினியின்  சட்டத்தரணி புகழேந்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த தகவல் எனக்கும் வந்துள்ளது. ஆனால் உண்மையா? என தெரியவில்லை. இதுபற்றி  சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுக்கின்றனர். ஓரிரு நாட்களில் நளினியை சந்திக்க உள்ளேன்” என்றார்.

அவ்வாறாயின் சட்டத்தரணி புகழேந்தி  சிறைக்கு  சென்று, நளினியை சந்தித்து பேசிய பின்னர்தான் முழுமையான தகவல் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்