இராணுவத்தினரை கொலை செய்தமை தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு.

போர்க் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் 26 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் போராளிகள் மூவருக்கு எதிரான வழக்கில் முதலாவது சாட்சியான முன்னாள் போராளியிடம் முன்னெடுக்கப்படும் பிரதம விசாரணை இன்றைய தினம் நிறைவடையாத நிலை வழக்கை நாளை வரை ஒத்திவைத்து வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது முல்லைத்தீவு விஸ்வமடுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போர்க் கைதிகளான கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் 26 பேரை பெற்றோல் ஊற்றப்பட்டு எரியூட்டிக் கொலை செய்தனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான மதியரசன் சுலக்சன், கணேசன் தர்ஷன் மற்றும் சிவதுரை திருவருள் ஆகிய மூவரும் 2012ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

2017ஆம் ஆண்டு சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இந்த வழக்கின் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபரால் மாற்றப்பட்டது.

நீதிமன்ற நியாயத்திக்கத்தின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றிலேயே நடத்தப்படவேண்டும் என்று அவர்கள் சார்பில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் சட்ட மா அதிபரால் வழக்கு மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

2012ஆம் ஆண்டு தொடக்கம் முன்னாள் போராளிகளான மதியரசன் சுலக்சன், கணேசன் தர்ஷன் மற்றும் சிவதுரை திருவருள் ஆகிய மூவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக 7 வருடங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

சந்தேகநபர்கள் மூவரும் பலத்த பாதுகாப்புடன் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சட்ட மா அதிபர் சார்பில் மூத்த அரச சட்டவாதி மாதவ தென்னக்கோன் மற்றும் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் ஆகியோர் முன்னிலையாகினர். சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டவாதி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையானார்.

சந்தேகநபர்களுக்கு திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை மன்றினால் வழங்கப்பட்டது. வழக்கின் விசாரணையை இன்று வரை ஒத்திவைப்பதாக வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் வழக்கு இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று விளக்கத்துக்கு எடுக்கப்பட்டது. சந்தேகநபர்கள் மூவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கின் முதலாவது சாட்சியான முன்னாள் போராளி ஆறுமுகம் ஜோதீஸ்வரனை பிரதம விசாரணைக்காக அரச சட்டவாதி மன்றின் அனுமதியுடன் அழைத்தார். அவர் சாட்சியமளிக்கையில்,

“ஆறுமுகம் ஜோதீஸ்வரன். நான் நுவரேலியாவைச் சேர்ந்தனான். 2005ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் உள்ள எனது பேரனாரைப் பார்ப்பதற்காக கிளிநொச்சிக்குப் பயணமானேன். அப்போது ஓமந்தையில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் என்னை வலுக்கட்டாயமாக தமது இயக்கத்தில் சேர்த்தனர்.

எனக்கு 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டு, வான் படைப்பிரிவு போராளியாகச் சேர்த்தனர். எனக்கு நன்கு சிங்களம் தெரியும். அதனால் விடுதலைப் புலிகளால் போர்க் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரிடம் விசாரணை நடத்த என்னை அழைத்துச் சென்றனர்.

வள்ளிபுனத்தில் அமைந்துள்ள விக்டர் – 1 என்ற முகாமுக்கு அழைத்துச் சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் இருவரை விசாரிக்க எனக்கு கட்டளையிடப்பட்டது. அங்கு வேறு இராணுவத்தினரும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கால்கள் இரண்டும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன” என்று சாட்சியமளித்தார்.

இன்றைய பிரதம விசாரணையில் அவரது சாட்சியம் இடைநிறுத்தப்பட்டது. அதனால் முதலாவது சாட்சியிடம் பிரதம விசாரணையைத் தொடர்வதற்காக வழக்கை நாளை வரை ஒத்திவைத்து மன்று உத்தரவிட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்