ஜனாதிபதியின் உத்தரவால் வீதிக்கு வந்த யாழ் மாநகரசபை தலைவர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பான நாட்டை உருவாக்கும் நோக்கில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் நாட்டில் திண்மக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு அரச உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதல் அவசியம் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ள நிலையில் யாழிலும் துப்பரவுபணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் திண்மக்கழிவுகளை அகற்றும் முதலாவது செயற்திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் , வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோருடன் 250 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து திண்மக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இத்தனை காலமாக மக்களை ஏமாற்றி வந்த ஆர்னோல்ட் போன்றோர் சுயமாக சிந்திக்கும் திறனற்றவர்கள் என பிரதேச மக்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளதோடு வடகிழக்கிற்கு தனிநாடு, சுயாட்சி தேவை என மேடைகளில் பேசிவரும் ஆர்னோல்ட் , தனது சமூகம் தொடர்பில் அக்கறையற்றவர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது பிரதேசத்தின் சுற்றாடலை பாதுகாப்பாக வைத்திருக்க திறனற்ற அவர்கள், இன்று ஜனாதிபதியின் உத்தரவினை அடுத்து வீதிக்கு இறங்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களின் பணத்தில் சுகபோகத்தினை அனுபவித்துவரும் அவர்களிற்கு தமது மக்களைப் பற்றி கடுகளவும் சிந்தித்துபார்க்காதவர்கள் எனவும்

யாழ் மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டுமென ஆர்னோல்ட்டிற்கு சபையில் உள்ள பலரும் எடுதுரைத்தபோது அவர் அதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை எனவும்

தனது பிரதேசத்தினை சுத்தமாக வைத்திருக்க தென்னிலங்கையில் இருந்து உத்தரவு வரவேண்டுமா என கேள்வி எழுப்பிய அவர்கள், மாட்டிற்கு மாடு சொன்னால் ஏறாது மணிகட்டின மாடு சொன்னால்தான் ஏறுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ஆர்னோல்ட் போன்ற கையாலாகாதவர்கள் பதவியில் இருப்பதனால் தான் நமக்கு இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை எனவும் அவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor