யாழ் – சென்னை இடையில் மற்றுமொரு விமான சேவை!

யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக பிற்ஸ் எயார் தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்தியாவில் விமானத்தை தரை இறக்குவதற்கான அனுமதி இது வரையில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை தமது நிறுவனத்தினால் மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமது நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்த இந்தியா சென்றிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை இந்திய விமான நிறுவனமான எலைன்ஸ் விமான நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் இந்த விமான சேவைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நாளாந்தம் சுமார் 50 பயணிகள் பயணம் செய்வதாகவும் விமான நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor