பொதுபல சேனாவின் புதிய நிலைப்பாடு!!

வட மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுபல சேனா அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட கடிதத்தில் வெளியான தகவல்கள் அவ்வமைப்பினுடையது அல்லவென நிராகரித்துள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் இனவாதம் பேசிக் கொண்டு செயற்படுவது நாட்டுக்கு பொருத்தமற்றது எனவும் தேரர் மேலும் கூறினார்.

தமது அமைப்பின் பெயரில் இவ்வாறான கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இது தமது அமைப்பினுடைய ஒரு செயல் அல்லவெனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

நாம் பாரம்பரிய முஸ்லிம்களுடன் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வில்லை. நாம் கடந்த காலத்தில் அமைப்பாக இருந்து இந்நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாத உம்மத் வாதிகளுக்கு எதிராகவே செயற்பட்டோம். இவர்கள் இந்நாட்டிலுள்ள பாரம்பரிய முஸ்லிம்களையே அழிக்க முற்பட்டனர். இன்றும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.

இப்போது எமக்கு ஜனாதிபதியொருவர் கிடைத்துள்ளார். பௌத்த உரிமைகள் குறித்து பேசுவோம். எமது எதிர்த் தரப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைப்போம். இவ்வாறு நாம் கூறும்போது, நாம் பதவிகளுக்கு அடிமைப்பட்டு விட்டுக்கொடுத்துக் கதைப்பதாக எமக்கு எதிராக கதைகளை கட்டவிழ்த்து விடுவர். இருப்பினும், அது குறித்து நாம் பொருட்படுத்திக் கொள்ள மாட்டோம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor