சி.வி. தலைமையில் மாற்று அணி ?

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழுவொன்று இதற்கான பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் இதற்கமைய சில சந்திப்புக்களை அவர்கள் நடத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற நிலையில், அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ஆரம்பித்தார்.

அதேபோல கூட்டமைப்பில் பங்காளிக் கட்சியாக இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து இயங்கி வருகிறது. மேலும் கூட்டமைப்பில் இருந்த ஐங்கரநேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித் தனி கட்சிகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

இறுதியாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கூட்டமைப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர்கள் சார்ந்த கட்சியான ரெலோ இயக்கம் கட்சி தீர்மானத்தை மீறிச் செயற்பட்டதாக கூறி இவர்களை கட்சியிலிருந்த இடைநிறுத்தியுள்ள நிலையில் இவர்களும் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளனரென கூறப்படுகிறது.

இவ்வாறு முன்னாள் முதலமைச்சரின் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் கூட்டமைப்பில் இருந்த வெளியேறி தற்போது புதிய கட்சிகளை ஆரம்பித்துள்ளவர்களின் கட்சிகளும் மற்றும் புதிதாக ஆரம்பிக்கவுள்ள சிறிகாந்தாவின் கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து மாற்று அணியொன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்