மட்டு. ஆரையம்பதி குளத்தில் குளித்த மூன்று இளைஞர்கள் சடலமாக மீட்பு.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் உள்ள தீர்த்தக்குளம் ஒன்றில் குளித்துக்கொண்டிருந்தபோது காணாமல்போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுக்கேணி தீர்த்தக்கேணியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீராட சென்றுள்ளனர்.

இதன்போது குளத்தின் சகதிப் பகுதிக்குள் நான்கு இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அருகில் இருந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியில் ஒருவர் காப்பாற்றப்பட்ட அதேவேளை மூவர் காணாமல்போயிருந்தனர்.

குறித்த குளத்தில் நீர்மட்டம் அதிகமாக காணப்பட்டதால் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அப்பகுதி இளைஞர்களினால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது,

மேலும் மண்முனைப்பற்று பிரதேச சபையினால் குறித்த குளத்தில் இருந்து நீர்வெளியேற்றம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், காணாமல்போன மூவரின் சடலங்களும் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது. குறித்த மூவரின் சடலங்களும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கினை சேர்ந்த சு.தர்சன் (20-வயது), கே.திவாகரன்(19-வயது), எஸ்.யதுர்சன் (19-வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்