சவுதி அரேபியாவின் முதல் சாதனைப் பெண்!

சவுதி அரேபியா வரலாற்றில் கார் பந்தயத்தில் முதல் பெண்ணாக ரீமா ஜுஃபாலி (Reema Juffali) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டுவதற்குத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன.

ஆனால், சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆட்சிக்குப் பின்னர் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இவர் சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், சாரதி உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார். பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சவுதியில் பெண் கார் பந்தய ஓட்டுநராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் 27 வயதான ரீமா ஜுஃபாலி. இவர் சவுதியின் ஜெட்டா நகரில் வளர்ந்தவர். அமெரிக்காவில் கல்வி பயின்றவர்.

ஜகுவர் ஐ-பேஸ் (Jaguar I-PACE eTROPHY) கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள ரீமாவுக்கு சவுதி இளவரசர்கள் உட்பட பல்வேறு தரப்புகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து ரீமா ஜுஃபாலி கூறும்போது, “பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. நான் தொழில் ரீதியாக கார் பந்தயத்தில் பங்கேற்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் உண்மை என்றால், நான் இப்போது கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளேன். இது அற்புதமானது” என்றார்.


Recommended For You

About the Author: Editor