எதிர்க்கட்சி மக்களை ஏமாற்றுகிறது – ஜே.வி.பி!!

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சியினர் தங்கள் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் பொதுமக்கள் மத்தியில் அமைதியை உறுதிப்படுத்துதல் மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இவ்வாறு ஏமாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வின்போது இன மற்றும் மத தீவிரவாதத்தை தோற்கடித்து நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களை தொழிற்சங்கத் தலைவர்களிடம் ஜே.வி.பி. கையளித்தது.

இதனை அடுத்தது அங்கு கருத்து தெரிவித்த அவர், “எதிரணியினர் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறிக்கொண்டு மறுமுனையில் இன பாகுபாட்டை ஊக்குவிக்கின்றனர்.

அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் 240 மசூதிகளை நிர்மாணித்திருந்தனர். ஆனால் தற்போது நாட்டில் மசூதிகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இவர்களே மத தீவிரவாத குழுக்களுக்கு சம்பளம் கொடுத்தது, இப்போது அவர்களின் அரசியல் ஆதாயங்களைப் பெற இன பாகுபாட்டைப் பயன்படுத்த முயற்சி செய்கின்றனர்.

எதிர்க்கட்சியின் இத்தைகைய நடவடிக்கையினால் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள்.

நாட்டில் அனைத்து சமூகங்களும் மதத்தினரும் இணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே நாட்டில் அமைதியை உறுதிப்படுத்த முடியும்.

தற்போது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்தால், பாடசாலைகளுக்கு அருகில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

வீதியில் சோதனை சாவடிகள் இருந்திருக்காது.” என்றும் அவர் கூறினார்.


Recommended For You

About the Author: Editor