ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை!!

ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றியுள்ளது.

ஹொங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையிலேயே இவ்வாறு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் முதல் சட்டமூலம் ஹொங்கொங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும்.

அதே போல் “ஹொங்கொங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019” என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்டமூலத்தில் ஹொங்கொங் பொலிஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடைசெய்யும்.

அத்துடன் இந்த சட்டமூலங்கள் ஹொங்கொங்கில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும்.

இதற்கிடையே ஹொங்கொங் விவகாரம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவுக்கான அமெரிக்கா தூதருக்கு சீன வெளியுறவு அமைச்சகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள், ஹொங்கொங்கில் குற்றவழக்குகளில் சிக்குபவர்கள் மீது வெளிப்படையான விசாரணை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஆர்வலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 6 மாதங்களாக நடந்துவரும் இந்த போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த போராட்டம் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறது.

இந்த நிலையிலேயே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஹொங்காங் போராட்டம் தொடர்பாக 2 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor