ஜனாதிபதி கோத்தாவும் இந்திய அரசும்!!

கோத்தபாயா சீன ஆதரவாளர். அவர் பதவிக்கு வந்தால் இந்திய அரசு ஈழத் தமிழர்களை ஆதரிக்கும் என்று சில தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கோத்தபாயா வெற்றி பெற்றவுடன் முதல் வாழ்த்து தெரிவித்த அந்நிய நாட்டு தலைவர் இந்திய பிரதமர் மோடி அவர்களே.

அதுமட்டுமல்ல கோத்தபாயா பதவி ஏற்றவுடன் அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு அமைச்சரும் இந்திய வெளியுறவு அமைச்சரே.

அதையும்விட கோத்தபாயா செல்லும் முதல் நாடாக இந்தியாவே இருக்கப் போகிறது. ஆம் வரும் 29ம் திகதி அவர் இந்தியா சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

ஆனால் எமது ஆய்வாளர்களோ வழக்கம்போல இதை “இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை என்றும் தமிழருக்கு பாதகம் எற்பட்டால் இந்தியா பொறுக்காது” என்றும் எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று மட்டுமல்ல, 1983ம் ஆண்டு முதல் இந்திய அமைச்சர்கள் இலங்கை வரும்போது எல்லாம் இப்படித்தான் இவர்கள் எழுதி வருகிறார்கள்.

உண்மையில் கோத்தா ஜனாதிபதியாக வருவதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பியிருக்கின்றன என்றே நினைக்க தோன்றுகிறது.

ஏனெனில் கோத்தா மூலம் தமது நலன்களுக்கான ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடியும் என இவர்கள் நினைக்கின்றனர்.

“எட்கா” ஒப்பந்தத்தை இந்தியாவும் மிலேனியம் ஒப்பந்தத்தை அமெரிக்காவும் கோத்தா மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நினைக்கின்றன.

கடந்த ரணில் அரசு மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தங்களை செய்து கொள்ளாமல் தயக்கம் காட்டி வந்தது.

எனவேதான் உறுதியான ஜனாதிபதியாக கோத்தாவை கொண்டு வந்தால் இவ் ஒப்பந்தங்களை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என இந்தியாவும் அமெரிக்காவும் நினைத்திருக்கலாம்.

கோத்தா பதவிக்கு வருவதற்காகவே இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டதாக முன்னர் கூறப்பட்டது.

ஆனால் இது மோடி பதவிக்கு வருதற்காகவே நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் என தற்போது தெரிய வருகிறது.

காஸ்மீரை அடுத்து தமிழ்நாட்டில் குண்டு வெடிக்க இருந்ததாகவும் ஆனால் அப்படி நடக்கப்போகிறது என்பது பலராலும் ஊகம் தெரிவித்தமையினால் அக் குண்டு வெடிப்பு இலங்கையில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

ஏனெனில் இந்த குண்டு வெடிப்பை அடுத்து இலங்கையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களைவ விட அதிகளவு முஸ்லிம்கள் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அதில் ஒருவரைக்கூட இலங்கை பொலிசார் விசாரணை செய்வதற்கு இந்திய அரசு இதுவரை அனுமதிக்கவில்லை.

அதுமட்டுமல்ல இச் சம்பவத்திற்கு முன்னர் தன்னை கொலை செய்ய இந்திய உளவு நிறுவனமான றோ முயற்சி செய்கிறது என்று ஜனாதிபதி மைத்திரி குற்றம் சாட்டியிருந்தார்.

அது தொடர்பாக ஒரு இந்தியரைக்கூட இலங்கை பொலிசார் கைது செய்தனர்.

ஆனால் இந்திய தூதரின் தலையீட்டில் இந்த கைது செய்யப்பட்ட இந்தியர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையையும் ஊற்றி மூடி விட்டார்கள்.

இனி குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையும் கைவிடப்படலாம். என்ன நடந்தது என்ற உண்மை மக்களுக்கு தெரிய வராமலே மறைக்கப்படலாம்.

உண்மைகள் இப்படி இருக்கும்போது எமது ஆய்வாளர்களோ கோத்தா வந்தால் இந்திய அரசு தமிழருக்கு உதவும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.


Recommended For You

About the Author: Editor