பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட முதல் 30 நாடுகளில் பிரித்தானியாவும்

உலகில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட முதல் 30 நாடுகளில் பிரித்தானியாவும் இடம்பெறுவதாக சர்வதேச குறியீடொன்றின் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பயங்கரவாதத்தின் தாக்கத்தை அளவிடும் இந்த பட்டியலில் உள்ள 163 நாடுகளில் பிரித்தானியா 28 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு மேற்கு நாடுகளில் தீவிர வலதுசாரி தீவிரவாதம் அதிகரித்து வருவதைக் கண்டறிந்துள்ளது, இதுபோன்ற குற்றங்களுக்காக ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிகரித்து வருகிறது.

ஆனாலும் முந்தைய இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தீவிர வலதுசாரி தீவிரவாதத்துக்கு எதிரான பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜூன் இறுதி வரையிலான பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி 266 பயங்கரவாத கைதுகளில் 76 பேர் (சுமார் 29%) தீவிர வலதுசாரிகளுடன் தொடர்புடையவர்கள். அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 354 இல் 76 (22%) ஆக இருந்தது.

பிரித்தானியாவில் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸாரின்நடவடிக்கைகளில் சுமார் 10% மானவை தீவிர வலதுசாரி அமைப்புக்களுக்கு எதிரானவையாகும். இது 2017-18 ஆம் ஆண்டில் 6% ஆக அமைந்திருந்தது.

இஸ்லாமியர்களால் ஊக்குவிக்கப்பட்ட 14 தாக்குதல்கள் முயற்சிகளும் 4 தீவிர வலதுசாரிகளின் தாக்குதல் முயற்சிகளும் தடுக்கப்பட்டதாக நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் நீல் பாசு கடந்த ஜனவரி மாதம் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும்பாலான பயங்கரவாத மரணங்களுக்குப் பின்னால் ஆப்கானிஸ்தானின் தலிபான் இருப்பதாகக் கூறப்படுவதையடுத்து பயங்கரவாதக் குறியீட்டில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்