விபத்தினை ஏற்படுத்திய ஆசிரியை விளக்கமறியலில்.

வீதியில் துவிச்சகர வண்டியில் பயணித்த மாணவி ஒருவருடன் விபத்து ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நடவடிக்கைக்கு முன்னதாக சம்பவ இடத்திலிருந்த சென்ற ஆசிரியை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

“மாணவி ஒருவர் விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அவரைச் சகோதரி எனக் குறிப்பிட்ட ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் நீங்கள் ஆசிரியராக உள்ள போதும் பொலிஸாருக்கு அறிவித்து உரிய விசாரணையை நடத்தாமல் பொற்றுப்பற்ற வகையில் அங்கிருந்து சென்றுள்ளீர்கள்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் கண்டித்தார்.

யாழ்ப்பாணம் பூநாறி மரத்தடியில் இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.

பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவி, ஒழுங்கையிலிருந்து பிரதான வீதியில் வந்து ஏறிய போது கே.கே.எஸ் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியருடன் மோதுண்டதால் இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடம்பெற்றதும் மாணவியைத் தூக்கிவிட்டு அவரை சகோதரியுடன் முச்சக்கர வண்டி ஒன்றில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த பின்னரே அங்கிருந்து சென்றதாக ஆசிரியை தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது. வைத்தியசாலைப் பொலிஸாரின் அறிவிப்பை அடுத்து யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு அண்மையாகவிருந்த சிசிரிவி கமராவில் நேற்றைய விபத்துச் சம்பவத்தைப் பார்வையிட்ட பொலிஸார், ஆசிரியையின் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடை வைத்து அவரைக் கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் ஆசிரியை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொலிஸாருக்கு அறிவிக்காது ஆசிரியை சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டார் என்று பொலிஸார் மன்றுரைத்தனர். ஆசிரியை சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தமது தரப்பு கருத்துக்களை மன்றுரைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், ஆசிரியை பொறுப்பான பதவிநிலையிலிருந்து கொண்டு பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டியதுடன், அவரை வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்