அஞ்சல் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கப்பெறாவிட்டால், நாளைய தினம் முதல் போராட்டம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அஞ்சல் பணியாளர்களது தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வாகன போக்குவரத்து விதிகளின் படி அபராதத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அந்த தருணத்தில் இருந்து சேவைப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பதில் வழங்கியுள்ள போக்குவரத்து மற்றும் பொது விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க, முடியுமாக இருந்தால் சேவைப் புறக்கணிப்பு ஒன்றை நடத்திக் காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை, ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருப்பதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தநிலையில், அது தொடர்பாக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அவசரகால சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், தொடருந்து பணியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.

எனினும் அதனைக் கருத்திற்கொள்ளாமல் இவ்வாறு வாராந்த பணிப்புறக்கணிப்புக்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் முடியுமான அனைத்து வழிகளையும் ஆராயவிருப்பதாக ராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: Editor