காஷ்மீர் முதல் நடுக்காட்டுப்பட்டி வரை: மக்களவை!

காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம், ஜேஎன்யூ மாணவர்கள் மீதான நடவடிக்கை, சோனியா காந்தி குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி விலக்கப்பட்டது, நடுக்காட்டுப்பட்டியில் சுஜித்தை மீட்க முடியாதது என பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட்டன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று(நவம்பர் 18) தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரின்போது காஷ்மீரில் நிலவும் சூழல், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி மத்திய அரசிடம் பதிலைப் பெற எதிர்க்கட்சிகள் தீவிரமாகி வருகின்றன.

மக்களவையில் முதல் நாளான நேற்றே காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி விவாதம் எழுப்பினார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஜேஎன்யூ மாணவர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அந்த பிரச்சினையை எழுப்பினர். அவையின் மற்ற அலுவல்களை ஒதுக்கி வைத்து விட்டு முழுமையாக இந்த இரு விவகாரங்கள்(காஷ்மீர்-ஜேஎன்யூ) குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

உறுப்பினர்களின் கோரிக்கையை உரிய முறையில் எழுப்ப வேண்டும், அதனை உரிய முறையில் பரிசீலித்து அனுமதி வழங்கப்படும், அதுவரை அவை வழக்கமாக செயல்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதிக்க வேண்டும் என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் தொடர்ந்து அமளி நீடித்தது. இதையடுத்து வேறு வழியின்றி அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

அதன் பின்னர் மீண்டும் அவை தொடங்கியது. காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கேள்வி நேரத்துக்கு பிறகு, ‘‘காங்கிரஸ் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் இந்த அரசு அலட்சியமாக உள்ளது.

மிக முக்கியத்துவம் வாய்ந்து இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். சமீபத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புப் படை பாதுகாப்பை (எஸ்பிஜி) மத்திய அரசு திரும்பப் பெற்றது.

“ஆனால் இந்த விவகாரத்தை கேள்வி நேரத்துக்கு பிறகு எழுப்பக் கூடாது” என கண்டித்த சபாநாயகர், இதுதொடர்பாக தனியாக நோட்டீஸ் வழங்க கோரினார். ஆனால், காங்கிரஸ் இதுதொடர்பாக நோட்டீஸ் ஏதும் வழங்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வாலும் கூறினார்.

இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களும் குரல் கொடுத்தனர்.

இதனால் அவையில் அமளி நீடித்தது.
நடுக்காட்டுபட்டி சென்னை ஐ.ஐ.டி-யில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தி.மு.க எம்.பி கனிமொழி நேற்று(நவம்பர் 18) கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேசினார்.

ஜோதிமணி, “என் தொகுதியில் நடந்த வலி மிகுந்த சம்பவத்தை இந்த சபையின் முன் கூறுகிறேன். மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான்.

அந்தச் சிறுவன் எத்தனை நாள் உயிரோடு இருந்தான் எனத் தெரியாது.நான்கு நாள்களாக மீட்புப்பணிகள் நடந்தன. அந்தக் குழந்தை தண்ணீர், காற்று, உணவு என எதுவும் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தது.
அந்த அழ்துளைக் கிணற்றின் அருகே குழந்தையின் அம்மா கண்ணீரோடு காத்திருந்தார்.

அப்பா, அம்மா என வார்த்தைகளைக் கேட்க முடிந்தது. அதன்பின் இதயத்துடிப்புகளை மட்டுமே கேட்டோம். அதுதான் அந்தக் குழந்தையின் கடைசி நிமிடமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். அவர்களின் வேண்டுதல் எல்லாம் அந்தக் குழந்தை உயிருடன் மீட்க வேண்டும் என்பதுதான். அத்தனை மக்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் தனியார் குழுக்கள், ஓ.என்.ஜி.சி, எல்&டி போன்ற நிறுவனங்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும், இந்தக் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கிறது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கான கருவிகள் நம்மிடம் இல்லை. மீட்புப் பணிகளின் கடைசி நிமிடத்தில் அந்தச் சிறுவன் அழுகிய சடலத்தின் வாடையை மட்டுமே உணர முடிந்தது.

தமிழக அரசு, சரியான நேரத்தில் மீட்புப்பணிகளில் கவனம் செலுத்தியிருந்தால் குழந்தையை உயிரோடு மீட்டிருக்க முடியும். அந்தக் குழந்தை 13 அடி மற்றும் 27 அடிகளில் இருந்தபோது பேரிடர் மீட்புப் படையின் உதவியை நாடி இருக்கலாம்” எனக் கூறினார்.


Recommended For You

About the Author: Editor