
காஷ்மீரின் சியாச்சின் பனிப்பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 இராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சியாச்சினின் வடக்கு பனிச்சிகரப் பகுதியில் சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் நேற்று (திங்கட்கிழமை) திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் 4 இராணுவ வீரர்களும் 2 தொழிலாளர்களும் உயிரிழந்து விட்டதாகவும் 2 வீரர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரியில் சியாச்சினில் மிகப் பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், இமயமலையின் மீதுள்ள சியாச்சின் பனிமலைப் பகுதி ஆண்டு முழுவதும் பனிகட்டிகளால் நிறைந்து காணப்படும். ஊடுருவலைத் தடுக்க, இந்த பகுதியில் முகாம் அமைத்து இந்திய இராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.