ஐயப்ப பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

1. துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருவுருவப் பதக்கம் ஒன்றினை இணைத்த மாலையை விரதம் ஆரம்பிக்கும் முன்னர் குலதெய்வம் / இஷ்ட தெய்வங்களை வணங்கி, தாய், தந்தையை வணங்கி குருசுவாமி கைகளால் மாலை அணிந்து கொள்ளலாம். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் சமயத்தில் உறுதியான கம்பியால் கட்டிய மாலையை அணிய வேண்டும். துணை மாலையும் அணிய வேண்டும்.

2. மாலையணிந்து கொண்டவுடன் குருசாமிக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து ஆசிபெற வேண்டும்.

3. ஐயப்பனாக மாலை தரித்த நேரத்திலிருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர் வழிகாட்டுதலை ஏற்று, மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடந்து யாத்திரையை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டும்.

4. விரத காலங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பு ம் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்கிட வேண்டும்.

5. தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்துகொண்டு வாய்விட்டுச் சரணம் சொல்லி ஐயப்பன் புகழ்பாடிட வேண்டும்.

6. விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவை தரித்துப் பூஜைகள் செய்து பாடல்கள் பாடி அவர்கள் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரண கோஷங்கள் சொல்ல வேண்டும்.

7. விரத காலம் முழுமையும் ஒரு வேளை அளவோடு சைவ உணவருந்தி, இரவில் பால், பழம் போன்ற இலகு ஆகாரங்களை உட்கொண்டு உபவாசம் இருத்தல் வேண்டும்.

8. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் விரத காலத்தில் கருப்பு, நீலம், ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேட்டிகளையே அணிதல் வேண்டும்.

9. இரவில் படுக்கை, தலையணை போன்ற சுக சவுகரியங்களைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது பாய் விரித்து அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும்.

10. முறையாக விரதம் இருந்தால் தங்களது மனசாட்சி அனுமதிக்கும் பட்சத்தில் மாலை போடாமல் 41 நாட்கள் விரதமிருந்து புறப்படும் நாளன்று மாலை அணிவதில் தவறேதும் இல்லை.

11. பக்தர்கள் மாலை தரித்த பிறகு, ஆண்களை ஐய்யப்பா என்றும், பெண்களை மாளிகை ப்புரம் என்றும், சிறுவர்களை மணிகண்டன் என்றும், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.

12. மண்டல நாட்களான 48 நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணத்தை மேற்கொள்வதே போற்றத்தக்க உத்தமமான செயலாகும்.

13. மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது “சாமி சரணம்‘’ என்று தொடங்கி பின் விடைபெறும் போது “சாமி சரணம்‘’ எனச் சொல்ல வேண்டும்.

14. இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும்.

15. 18ஆண்டுகள் சபரிமலை செல்லக்கூடிய ஐய்யப்ப பக்தர்கள் தென்னங்கன்று எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

16. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் போது கடமையைச் சரிவர செய்யும் பொருட்டு காலணி அணியலாம். அதில் குற்றம் எதுவும் இல்லை.

17. ஒரு முறை உபயோகித்த இருமுடிப்பை / போர்வை போன்றவைகளை மறு முறை உபயோகிக்கலாம். அத்துடன் இன்னொருவர் உபயோகித்த இரு முடிப்பையைச் சுத்தமாக இருக்கும் பட்சத்தில் உபயோகிக்கலாம்.

18. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருட்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பது தான் முறை.

19. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் சொல்லிப் புறப்பட வேண்டும்.

20. ஐயப்பப் பக்தர்கள் வெளித்தலங்களுக்கு வழிபடச் செல்லும் போது அங்குள்ள நடைமுறைகளையும், கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் மதித்து நடத்தல் அவசியமானது.

21. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை மற்றவர்களுக்கு எவ்விதமான இடையூ றும் இல்லாமல் அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் இடத்திலேயே கொண்டாடுதல் வேண்டும்.

22. சன்னிதானத்தில் கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எவ்வித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோர்க்கும் நன்று.

23. இருமுடிக்கு பயன்படுத்தும் தேங்காய்களை அருள்மிகு ஐய்யப்பன் சந்நிதியில் கொடுத்து நெய் அபிஷேகத்திற்கு நெய் எடுத்த பிறகு, அந்தத் தேங்காய் மூடிகளைக் கற்பூர ஆழியில் போடுவதற்குப் பதிலாக அன்னதானம் செய்யும் இடங்களில் தரலாம். ஐய்யப்ப பக்தர்களின் அன்னதானத்திற்கு பயன்படுத்தத் தருவது சிறப்பு.

உ. தாமரைச்செல்வி


Recommended For You

About the Author: Editor