மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 2-1 என்ற கணக்கில் வெற்றிக் கொண்டது.

லக்னொவ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹஸ்ரதுல்லா சஸாய் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய கரீம் ஜெனட்டும் 2 ஓட்டங்களுக்கு ஏமாற்றினார்.

இதன்பிறகு களமிறங்கிய இப்ராஹிம் சத்ரான் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய அஸ்கர் ஆப்கான், மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ராமனுல்லா குர்பாஸ்சுடன் ஜோடி சேர்ந்து 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டார்.

இதனையடுத்து இப்ராஹிம் சத்ரான் 24 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ராமனுல்லா குர்பாஸ் 79 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, நஜிபுல்லா சத்ரான் 14 ஓட்டங்களுடனும், மொஹமட் நபி 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினார். அணித்தலைவர் ரஷித் கான் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தார்.

குல்பதீன் நய்ப் 4 ஓட்டங்களுடனும், நவீன் உல் ஹக் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க, ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செல்டோன் கொட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், கீமோ போல் ஆகியோர் தலா 2 ஓட்டங்களையும், கிரன் பொலார்ட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லெண்ட்ல் சிமெண்ஸ் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய பிரெண்டன் கிங், 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

அடுத்து ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எவீன் லிவீஸ் 24 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பிறகு களமிறங்கிய எந்த வீரர்களுக்கு அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கவில்லை.

சிம்ரொன் ஹெட்மியர் மற்றும் கிரன் பொலார்ட் ஆகியோர் தலா 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, ஜேஸன் ஹோல்டர் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த சாய் ஹோப் 52 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

கீமோ போல் 4 ஓட்டங்களுடனும், கெரி பியர் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க மேற்கிந்திய தீவுகள் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி, 29 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும், முஜிப் உர் ரஹ்மான், கரிம் ஜெனட், குல்பதீன் நய்ப் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ராமனுல்லா குர்பாஸ் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக கரிம் ஜெனட் தெரிவு செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் ஒரேயொரு ரி-20 போட்டியில் விளையாடுகின்றது.

இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை, மேற்கிந்திய தீவுகள் அணி முழுமையாக கைப்பற்றியது. தற்போது, ரி-20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இறுதியாக இரு அணிகளுக்கிடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 27ஆம் திகதி லக்னொவ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்