வடக்கு, கிழக்கில் மழை பெய்யும் ?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்தோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்