விக்கி, கூட்டமைப்பை புறம்பேசுவது வெட்கக்கேடானது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவில் அரசியல் முகவரியைத் தேடிக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறம் பேசுவதிலேயே குறியாக இருக்கின்றார். இது வெட்கக்கேடான விடயம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் காட்டமாகத் தெரிவித்தார்.
‘கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயத்தில் கூட்டமைப்பினர் அரசுக்கு மாமா வேலை செய்கின்றனர். அதனை அவர்கள் நிறுத்த வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
விக்கியின் இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும்போதே சிவமோகன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவால் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ் மக்களின் எந்த ஒரு அடிப்படைப் பிரச்சினைகளையும் விக்னேஸ்வரன் கருத்தில் எடுத்திருக்கவில்லை.
நீலிக் கண்ணீர்
போர்க்காலத்தில் எமது இளைஞர்களைச் சிறையில் தள்ளி அரசியல் கைதிகள் ஆக்கிவிட்டு இன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக விக்னேஸ்வரன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்.
விக்னேஸ்வரன் நீதியரசராக இருக்கும்போதுதான் பதவியைக் கூறலாம். அதிலிருந்து அவர் ஓய்வுபெற்றுவிட்டால் முன்னாள் நீதியரசர் ஆகிவிடுவார். ஆனால், இவர் இன்றும் தான் ஒரு நீதியரசர் என்று கடிதங்களிலும் பத்திரிகைகளிலும் கையொப்பம் இடுகின்றார்.
சிங்களவர்களுக்கு
சாமரம் வீசுபவர்
சி.வி. விக்னேஸ்வரனின் வரலாறு சிங்களவர்களுக்கு சாமரம் வீசி வாழ்வதுதான். அதனடிப்படையில்தான் தனது பிள்ளைகளைச் சிங்களவர்களுக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். சிங்கள இனவாதியின் சம்பந்தியாக இருக்கும் இவரால் எப்படி தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத்தர முடியும்?.
கூட்டமைப்பின் தவறு
விக்னேஸ்வரனை அரசியலுக்குக் கொண்டு வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறு. அந்தத் தவறுதான் இன்று அவரை இவ்வாறு பேச வைத்துள்ளது என்பது கவலைக்குரிய விடயம்.
அடுத்த தேர்தலில் விக்னேஸ்வரனின் முகத்திரையைக் கிழித்தெறிய மக்கள் காத்திருக்கின்றார்கள்.
சிங்களப் பேரர்களுடன்
காலம் கழியுங்கள்
தமிழ் மக்கள் உங்கள் முகத்திரையைக் கிழித்த பிறகாவது உங்கள் சிங்கள தேசத்தில் உங்களது சிங்களப் பேரக்குழந்தைகளுடன் காலத்தைக் கழியுங்கள். பிறப்பால் மட்டும் தமிழரான நீங்கள், படித்தது பட்டம் பெற்று சேவை செய்து பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்தது எல்லாம் சிங்கள தேசத்துப் பேரினவாதிகளுக்கு. விசுவாசமாக உள்ள நீங்கள் எமது தமிழினத்தின் விடுதலை பற்றிப் பேசுவதற்கு அருகதையற்றவர்” – என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்