அய்யப்பன் கோவிலுக்கு வந்த 10 பெண்களை போலீசார் திருப்பி அனுப்பினர்

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு இருந்து வந்த தடையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதால், அதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, கடந்த ஆண்டு சபரி மலைக்கு சென்ற பல பெண்கள் போராட்டக் காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு கூறியது.

இந்த 7 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை, அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு நடைமுறையில் இருக்கும்.

ஆனால் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்றும், இதை மீறி வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

இதேபோல் கேரள சட்டத்துறை மந்திரி பாலன் கூறுகையில், சபரிமலையின் புனிதத்தை கெடுக்க பெண்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். பதினெட்டாம் படிக்கு கீழே உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.

அதன்பிறகு புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுதீர் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18 படிகளுக்கு கீழே மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி பதினெட்டாம் படி வழியாக சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றார். மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூலமந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதன்பிறகு பதினெட்டாம் படிக்கு கீழே காத்திருந்த அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என்ற சரண கோஷத்துடன் படி ஏறிச் சென்று அய்யப்பனை வழிபட்டனர்.

நடை திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

நடை திறப்பு நிகழ்ச்சியில் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே முதல் நாளான நேற்று சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 30 பெண்கள் நேற்று காலை பம்பை வந்து சேர்ந்தனர்.

பம்பையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்களுடைய அடையாள அட்டைகளை வாங்கி அவர்களது வயது, பெயர் உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர்.

அப்போது அவர்களில் 10 பெண்கள் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் சபரிமலையின் மத நம்பிக்கை நடைமுறைகள் குறித்து விளக்கி கூறிய போலீசார், இந்த ஆண்டு இளம் பெண்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை என்று கூறி அந்த 10 இளம்பெண்களையும் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள்.

இதுபற்றி அந்த பெண்கள் கூறுகையில், “முதல் நாள் சபரி மலையில் அய்யப்பனை தரிசனம் செய்து விடலாம் என்று நினைத்து வந்தோம். இங்கு வந்த பிறகுதான் சபரிமலை ஆச்சார நடைமுறைகளை அறிந்து கொண்டோம். எனவே நாங்கள் திரும்பிச் செல்கிறோம்” என்றனர்.

சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நிலக்கல்லில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் 144 தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் புனேயில் கூறுகையில், “வருகிற 20-ந் தேதிக்குள் அய்யப்பனை தரிசனம் செய்ய சபரிமலை செல்வேன். கோர்ட்டின் முன்அனுமதி பெற வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் நகல் என்னிடம் உள்ளது. அதை எடுத்துச் சென்று அய்யப்பனை தரிசனம் செய்வேன்” என்று தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்படுவதாகவும் அப்போது அவர் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக கேரள மாநில டி.ஜி.பி. லோக்நாத் பெகரா கூறுகையில், சபரி மலையில் தரிசனத்துக்கு பெண்களை அனுமதிப்பது இல்லை என்பது தொடர்பாக அட்வகேட் ஜெனரலிடம் சட்ட ஆலோசனை செய்யப்படும் என்றும், மந்திரி கூறியபடி இந்த ஆண்டு பெண்களை அனுமதிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor