அச்சமின்றி ஜனநாயக உரிமையை பயன்படுத்துங்கள்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மக்கள் அச்சமின்றி தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையை பயன்படுத்துவது அவசியம் என கஃபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று(சனிக்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இன்றைய தினம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக கஃபே அமைப்பிலிருந்து மொத்தமாக 2200 கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனடிப்படையில், தேர்தல் வன்முறைகள், சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள், அதேபோன்று வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கும் செயற்பாடுகள் போன்றவற்றை எமது கண்காணிப்பாளர்கள் அவதானித்து எம்மிடம் அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனநாயக ரீதியில் மக்களுக்கு காணப்படும் பிரதான உரிமையே வாக்குரிமை. அந்த வாக்குரிமையை சகல வாக்காளர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கஃபே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆகையால், சகல வாக்காளர்களும் காலையிலேயே உங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்கினை பதிவுசெய்யுங்கள். வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்கின்ற போது அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு அடையாள அட்டையினை எடுத்துச்சென்று உங்கள் வாக்குரிமையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்