சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த ஒத்துழையுங்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும், நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்குமான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்து நாடு முழுவதும் ஜனநாயக தன்மையுடையதும், நியாயதிக்கத்திற்கு உட்பட்டதுமான அமைதியான சூழலொன்றை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்தோம்.

அத்தகைய ஜனநாயக, நியாயாதிக்க சூழலில் இடம்பெறுகின்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுயாதீன ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுதந்திரமானதும் நியாயமானதும், அமைதியானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு உரிய நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதே இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் எம் அனைவரினதும் கடமையாகும்.

தற்போது நாம் இத்தகைய சுதந்திரமான சூழ்நிலை மேலும் வலுப்படுத்த வேண்டும். மீண்டும் கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்கு எம்மால் இயலுமான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

எனவே அனைவரும் வாக்களிப்பதுடன், இந்த ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமானதும், அமைதியானதுமான முறையில் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோன்று ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து அமைதியான முறையில் செயற்படுமாறும் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்