தம்பிராசா விடுவிப்பு !

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவ பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா பொலிஸாரல் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட நிலையில் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்காளர்களின் விபரத்தை கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்ட போது , தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியபோதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என கோரி வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

அதனை அடுத்து தேர்தல் கடமைக்காக மாவட்ட செயலகத்தில் கடமையில் இருந்த பொலிஸார் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதற்கு அவர் உடன்படாததையடுத்து, பொலிஸார் அவரை பலவந்தமாக கைது செய்து தூக்கி சென்றனர்.

கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று , தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் விசாரணைகளின் பின்னர் இரவு 10 மணியளவில் அவரை விடுவித்தனர்.
குறித்த நபர் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பு செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்