கொழும்பில் வர்த்தகர் கொலை

தெஹிவளை – காலி வீதியிலுள்ள ஹாட்வெயார் ஒன்றின் உரிமையாளர் ஒருவர், கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமொன்று, இன்று (24) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த அப்துல் அஸீஸ் என்ற 63 வயதுடைய வர்த்தகர், களு​போவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை மேம்பாலத்திலிருந்து, கொழும்பு நோக்கிப் பயணிக்கும் காலி வீதியின் வலதுபுறமாக அமைந்துள்ள ஹாட்வெயார் நிறுவனத்தின் கதவை, பிற்பகல் 2 மணியளவில் முக்கால்வாசிக்கு மூடிவிட்டு, மீண்டும் கடையைப் பிற்பகல் 3.45 மணியளவில் திறக்கும் எண்ணத்தில், கடைக்குள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, கடைக்குள் நுழைந்திருந்த பிரிதொரு நபர், அங்கிருந்து பணத்தைக் கொள்ளையிடும் காட்சியை, சி.சி.டிவி கமெரா ஊடாகப் பார்வையிட்டுள்ள உரிமையாளர், அந்நபரைப் பிடிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது தன்னைச் சுதாரித்துக்கொண்ட சந்தேகநபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு, கடையின் உரிமையாளர் மீது தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்