யாழில் வைத்தியர் வீட்டுக்கு தீ வைத்தவர்கள் விளக்கமறியலில்.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் உள்ள சித்த வைத்தியர் ஒருவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்துக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 5 பேரை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

“இரு அடுக்கு மாடி வீட்டில் உரிமையாளரான வைத்தியர் மேல் தளத்தில் வசிக்கிறார். கீழ் தளத்தில் மருந்தக உரிமையாளர் வாடகைக்கு வசிக்கிறார். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வைத்தியரை அச்சுறுத்தும் வகையில் வாடகைக்கு இருந்த மருந்தக உரிமையாளர் கூலிக்கு ஆள் வைத்து இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி, குருனானந்த சுவாமி லேனில் இந்தச் சம்பவம் கடந்த 7ஆம் திகதி இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது:

சித்த வைத்தியரின் வீட்டின் கீழ் தளம் மருந்தக உரிமையாளர் ஒருவருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் வாடகைக்குப் பெற்ற வீட்டை நாளாந்த வாடகைக்கு மீள வழங்கி வருகிறார். இந்த மீள வாடகைக்கு விடும் பணியை மருந்தக உரிமையாளரின் மனைவி முன்னெடுக்கின்றார்.

இந்த நிலையில் சித்த வைத்தியரின் மகன் மீது மருந்தக உரிமையாளருக்கு சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வீட்டிலிருந்து வேறு இடத்துக்குச் செல்லாமல் வைத்தியரையும் அவரது மகனையும் மிரட்டுவதற்கு மருந்தக உரிமையாளர் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் ஊடாக நாவற்குழி, கைதடி உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி வைத்தியரின் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த அடாவடியால் ஹைஏஸ் வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் வீட்டின் முன்பக்கம் தீயால் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீ அணைப்புப் படையே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.

வைத்தியரின் முறைப்பாட்டையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பின்னணி கண்டறியப்பட்டு 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரும் விசாரணைகளின் பின்னர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ஐவரையும் வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது – என்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்